கற்பதற்கான சூழலை ஒழுங்குபடுத்துவது எப்படி?

கற்பதற்கான சூழலை ஒழுங்குபடுத்துவது எப்படி? 



 எவ்வளவு தான் ஆர்வமும், இலட்சிய வேட்கையும் இருந்த போதிலும், நமது கற்றலின் திறன் (Efficiency) நாம் கற்கும் சூழலிலும் (Environment) நாம் கற்பதற்காக பயன்படுத்தும் நுட்பங்களிலும் (Techniques) தங்கியிருக்கிறது. கல்வியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் கற்கத் தயாராகும் பலர் எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியாமல் எடுத்த எடுப்பிலேயே பாடக் குறிப்புகளை வாசிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால், காலப்போக்கில் களைப்பும், சோர்வும் அவர்களை ஆட்கொண்டு, அவர்களின் கற்கும் திறனையும் ஆர்வத்தையும் குறைத்து அவர்களின் இலட்சிய அவாவில் தளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. 

எனவே கற்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டால் மட்டும் போதாது; அந்த ஆர்வத்தை தொடர்ந்தும் பேணிக்கொள்வது மிக அவசியமாகும். இதற்கு நாம் கற்கும் சூழலும், நாம் கற்பதற்காகப் பயன்படுத்தும் நுட்பங்களும் பெரிதும் உதவுகின்றன. கற்கும் சூழலை எப்படி ஒழுங்குபடுத்திக்கொள்வது முதற்கட்டமாக, எமது கற்கும் சூழலை எப்படி ஒழுங்குபடுத்திக்கொள்வது எனப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் எமது கற்கும் சூழலை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.  

1. கற்கும் இடம். எப்பொழுதும் கற்பதற்காக பிரத்தியேகமான இடமொன்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், கற்றல் என்பது எமது மூளையின் சிந்தனை மற்றும் ஞாபகம் போன்ற உயர் தொழிற்பாட்டு மையங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் ஒரு செயன்முறையாகும். எனவே கற்றலின் போது எமது சிந்தனை ஒருமுகப்படுவதும், கூடிய அவதானம் செலுத்தபடுவதும் அவசியமாகும். இதற்காக புறச் சூழல் தாக்கங்களிலிருந்து விடுபட்ட ஒரு பிரத்தியேகமான இடம் தெரிவு செய்யப்பட வேண்டும்.  

2. சுற்றுப்புறம். நாம் தெரிவு செய்த அந்த இடத்தின் சுற்றுப்புறம் எப்பொழுதும் அமைதியானதாகவும், சுத்தமானதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை இடுவதற்கான சிறிய கூடையொன்றை எப்பொழுதும் வைத்திருத்தல் வேண்டும். அத்தோடு ஒட்டடைகள் முதலிய அழுக்குகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அமைதியும், சுத்தமும் எம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தாக்கம் செலுத்தும் விடயங்களாகும். சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும் போது, எமது முழுக்கவனத்தையும் கற்றலின் மீது செலுத்தும் சாத்தியம் ஏற்படுகிறது. அத்தோடு சுத்தமான சூழல் எம் மனதுக்கு இதத்தை ஏற்படுத்தி, சிந்தனைச் சிதறல்களிலிருந்து எமது மனதைப் பாதுகாக்கிறது. 

 3. மாற்றியமைத்தல். நாம் தெரிவு செய்த இடத்தின் சுற்றுப்புறத்தை அழகானதாயும், எமக்குப் பிடித்தமான காட்சிகள் நிறைந்ததாயும் மாற்றியமைத்தல் வேண்டும். இதற்காக, எமக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளின் படங்களை சுவர்களில் இணைக்க முடியும், அதேபோல சுவர்களுக்கு எமக்கு பிடித்த வண்ணங்களை பூச முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் எம் கண்களுக்கு ஏற்படும் இதம், எம்மை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. 

🔵 Follow us on facebook page for more updates 🔵
https://www.facebook.com/scienceorbit.org

4. கற்பதற்கான மேசை ஒன்றை ஒழுங்குபடுத்தல். இம்மேசையில் வெற்றுத் தாள்களும், பேனை, பென்சில் முதலிய கற்கும் உபகரணங்களும் மாத்திரமே வைக்கப்படல் வேண்டும். எவ்விதமான பாடக்குறிப்புகளோ, பாடப்புத்தகங்களோ இம்மேசையில் தொடர்ச்சியாக வைக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும். கற்கும் வேளைகளில் மாத்திரம், எப்பாடக்குறிப்பு தேவைப்படுகிறதோ, அப்பாடக்குறிப்பு மாத்திரமே இம்மேசையில் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதனால், “இவ்வளவு பாடக் குறிப்புகளும் கற்கப்பட வேண்டுமா?” எனும் பயம் நீங்கி, குறித்த நேரத்தில் ஒரு பாடத்தின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும். 

 5. பாடக்குறிப்புகளும் புத்தகங்களும். பாடக் குறிப்புகளையும், புத்தகங்களையும் பிரத்தியேகமான மேசையோன்றில் அல்லது இறாக்கை ஒன்றில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒழுங்குபடுத்தும் போது, பாட ரீதியாக அம்மேசை அல்லது இறாக்கை பிரிக்கப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு பாடங்களுக்குமான குறிப்புகளும், புத்தகங்களும் ஒரே இடத்தில் வருமாறு அதனை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். குறிப்புத்தாள்களை (Tutes) அங்குமிங்கும், சிதற வைக்காமல், ஒரு கோப்பினுள் (File) இட்டு, அந்தந்தப் பாடங்களுக்குரிய இடத்தில் வைக்க வேண்டும். தேவையான நேரங்களில் குறிப்புகள் எடுக்கப்பட்டு, பின்னர் உரிய இடத்தில் அக்குறிப்புகளை மீண்டும் வைத்து விடல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், “அந்தப் புத்தகத்தைக் காணவில்லை, இந்தப் பாடக்குறிப்பைக் காணவில்லை” எனும் தேடல்களும், அதற்காக விராயமாகும் நேரமும், அதனால் ஏற்படும் மன அளுத்தமும் குறைக்கப்பட முடியும். அத்துடன் அந்த பாடக்குறிப்புகள் கற்கும் மேசைக்கு அருகில் இருப்பது சிறந்தது. காரணம், சந்தேகங்கள் வரும் போது பாடக்குறிப்புகளை எடுத்து பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும்.

 6. வெளிச்சமும், காற்றோட்டமும். கற்குமிடத்திற்கு போதியளவு வெளிச்சமும், காற்றோட்டமும் இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் மந்தமான வெளிச்சம், பார்வைக் கோளாறுகளை மாத்திரமல்லாது, மிகையான தூக்கத்தையும் ஏற்படுத்தும். மிகையான வெளிச்சம் பார்வைக் கோளாறுகளையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். அதேபோல மிகையான காற்றும், மிகையான தூக்கத்தை ஏற்படுத்தும்; குறைவான காற்றோட்டம், வியர்வை மற்றும் சோர்வை ஏற்படுத்தும்.

 7. அமரும் ஆசனம். கற்பதற்காக அமரும் இருக்கை அல்லது ஆசனம் மிகுந்த கரடு முரடானதாயோ அல்லது மிகுந்த இதமானதாயோ இல்லாமல், நடுத்தரமானதாய் அழுத்தமாய் இருத்தல் வேண்டும், அத்தோடு ஆசனத்தின் முதுகை வைப்பதற்கான பகுதி அதிக சாய்வுடையாதாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கரடு முரடான இருக்கை அசௌகரியத்தை ஏற்படுத்தும், அதேவேளை மிகுந்த இதமான இருக்கையும் அதிக சாய்வுடைய முதுகுப்பகுதியுடைய இருக்கையும், இதமான தூக்கத்தை ஏற்படுத்தும்.

 8. படுக்கை (Bed) & மின்விசிறி (Fan). கற்கும் இடத்தில் எமது பார்வை வீச்சினுள் படுக்கை வைக்கப்படுவதை தடுத்தல் வேண்டும். அத்தோடு முகத்துக்கு நேரே மின்விசிறியை வைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் கற்பதை விட தூங்குவதற்கான ஆர்வத்தையே அதிகரிக்கும். 

 மேலுள்ள ஆலோசனைகளை ஆரம்பத்தில் அமுல்படுத்து சற்று கடினமான இருப்பினும், அவற்றை அமுல்படுத்தப் பழகிய பின்னர் மிகப் பிரயோசனமாயும், கற்கும் திறனை அதிகரிப்பதாயும் அமையும். 

🔵 Follow us on facebook page for more updates 🔵
https://www.facebook.com/scienceorbit.org

3 Comments

Post a Comment

Previous Post Next Post