கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவது எவ்வாறு? (How to get an interest in studies?)

கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவது எவ்வாறு? (How to get an interest in studies?)



எப்படியெல்லாம் இலகுவாகக் கற்க முடியும் என எல்லோரும் பல நுட்பங்களையும், வழிமுறைகளையும் ஆலோசனைகளாகச் சொல்கிறார்கள். ஆனால் கற்பதற்கே ஆர்வமில்லாத போது, எப்படித் தான் இந்த நுட்பங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுவதோ எனச் சிலர் மனதுக்குள் நினைப்பதுண்டு! கற்றலில் ஆரவமில்லாதவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த கட்டுரை வரையப்படுகிறது. 

ஒரு விடயத்தில் ஆர்வம் (Interest) ஏற்படுவதாயின் அந்த விடயத்தில் எதிர்பார்ப்புகள் (Expectations) இருப்பது அவசியமாகும். உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டினைக் குறிப்பிடலாம். கற்றலில் ஆர்வமில்லை எனச் சொல்லும் அனேகமானோர், கிரிக்கெட் விளையாட்டினைப் பார்க்கத் தவறுவதில்லை. கிரிக்கெட் விளையாட்டினை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும் வேளைகளில் அருகிலிருப்போர் கதைப்பது கூடச் சிலருக்கு புரிவதில்லை. கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதில் இவ்வளவு ஆர்வம் எமக்கு எங்கிருந்து ஏற்பட்டது என நாம் எப்போவாதவது சிந்தித்திருக்கிறோமா???

கிரிக்கெட் விளையாட்டில் இந்தளவு ஆர்வம் ஏற்படக் காரணம், அந்த விளையாட்டில் எமக்குப் பல எதிர்பார்ப்புகள் இருப்பதனால் ஆகும். எமது அணியின் வீரர்கள் அடுத்து என்ன செய்வார்கள்; எமது அணி எத்தனை ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளும்; எதிரணியினரின் எத்தனை விக்கெற்றுகள் வீழ்த்தப்படும்; இறுதியில் வெல்லப்போவது யார்; இப்படி பல எதிர்பார்ப்புகளோடு நாம் அந்த விளையாட்டின் முன்னே அமர்கிறோம். இதனால் ஏற்படும் அதீத ஆர்வம் அந்த விளையாட்டினுள்ளேயே எம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

ஆனால், இதே ஆர்வம் எமக்கு கற்பதில் ஏற்படுவதில்லை. இதற்கு மூன்று பிரதான காரணங்கள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

கற்பதில் ஆர்வம் இல்லாமைக்கான மூன்று பிரதான காரணங்கள்.


1.எம்மில் அனேகமானோருக்கு, நாம் எதற்காக கற்கிறோம்; கற்பதன் மூலம் நாம் இறுதியாக எந்த இலக்கினைப் பூர்த்தி செய்ய முனைகிறோம் எனும் அடிப்படைக் கேள்விக்கான பதிலே தெரியாது.

2.எமது கல்வித் துறையில் நாம் அடுத்து எதை அடையப் போகிறோம் எனும் எதிர்பார்ப்பு எம்மிடமில்லை.

3.இலட்சியங்களும், எதிர்பார்ப்புகளும் இருந்தபோதிலும் கூட, அவற்றை அடைந்து கொள்வதற்கான காலம் கிரிக்கெட்ஐப் போன்று குறைவாக இல்லாமல், நீண்டதாய் இருக்கிறது

இந்த மூன்று பிரதான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெறுவோமாயின், எமது கற்றலின் மீதான ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புகள் கைகூடும்.
பின்வரும் விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம் மேற்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, கற்றலின் மீதான எமது ஆர்வத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

🔵 Follow us on facebook page for more updates 🔵

https://www.facebook.com/scienceorbit.org

கற்றலின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துக் கொள்ள.

1.கற்பதன் மூலம் நாம் இறுதியாக எதை அடைந்து கொள்ளப் போகிறோம் எனும் எமது நீண்ட கால இலட்சியத்தை இப்போதே நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். நான் ஒரு வைத்தியனாக வேண்டும், நான் ஒரு பொறியியலாளன் ஆக வேண்டும், நான் ஒரு வக்கீல் ஆக வேண்டும் என்பதைக் காட்டிலும், நான் வைத்தியத்துறையிலும் ஒரு குறிப்பிட்ட நிபுணராய் ஆக வேண்டும், பொறியியல் துறையிலும் ஒரு பேராசிரியனாய் வர வேண்டும் போன்ற பெரிய இலக்குகளை வகுத்துக் கொள்வது சற்று சிறப்பாய் அமையும். 
இவ்வாறு இலட்சியத்தை வகுத்துக் கொள்ளும் போது எம்மை அறியாமலேயே எம்முள், எமது இலட்சிய கதாபாத்திரம் மெல்ல மெல்ல நுழையத் தொடங்கும். எப்படியாவது நான் அந்த இலட்சியத்தை அடைந்துவிட வேண்டுமென எம் மனதில் ஆசையும், ஆர்வமும் உண்டாகும்.. இதனால் கற்பதன் ஆர்வம் அதிகரிக்கும்.

2.நாம் வகுத்துக் கொண்ட அந்த இலட்சியத்தை ஏற்கனவே அடைந்து சாதனை புரிந்த, சாதனையாளர் ஒருவரின் அல்லது சிலரின் வாழ்க்கை வரலாறுகளை தேடி அறிந்து வைத்தல் வேண்டும். இவ்வாறு அறிவதன் மூலம், அவர்களை எமது கல்வியின் மூலமான இலட்சியத்தை அடைந்து கொள்வதில் முன்மாதிரியாய் கொள்ளும் மனப்பாங்கு எம்முள் வளர்வதோடு, ஆர்வமும் அதிகரிக்கும். 

3.கற்றலின் மூலம் அடைவதற்காக நாம் மேற்படி வகுத்துக் கொண்டிருக்கும் எமது இலட்சியத்தை குறுகிய காலத்தினுள் அடைய முடியாது. ஏனெனில் அது நீண்ட கால இலட்சியமாகும், எனவே அடிக்கடி எமக்கு சோர்வுகளும், இயலாமையும் ஏற்பட வாய்ப்புண்டு, இதனைத் தவிர்ப்பதற்காக பல குறுகிய கால இலக்குகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு எமது நீண்ட கால இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான சரியான பாதையை அறிந்திருப்பது அவசியமாகும். இதற்காக எமது நீண்ட கால இலட்சியத்தில் ஏற்கனவே சாதனை புரிந்த ஒருவரின் உதவியை நாடலாம்; அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து அந்தப் பாதையை அறிந்துகொள்ளலாம். 
அந்தப் பாதையைத் தெரிந்து கொண்ட பின், அதனைக் குறுகிய காலத்தினுள் அமையுமாறு, பல கட்டங்களாகப் பிரித்து சிறு சிறு இலக்குகளை வகுத்துக் கொள்ளலாம். பின்னர் அந்த குறுங்கால இலக்குகளை அடைந்து கொள்வதனூடாக, எமது நீண்ட கால இலட்சியத்தை கட்டம் கட்டமாக அடைய முயற்சிக்கலாம். இதனால் எமது இலட்சியத்தின் மீதும் ஒரு ஆர்வமுண்டாகும், வாழ்வில் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும், கற்றலிலும் ஆர்வம் அதிகரிக்கும். 

4.இறுதியாக, நாம் எவ்வளவு தான் ஆர்வத்தோடு, தியாகங்கள் பல புரிந்து எமது நீண்ட கால இலட்சியத்தினை அடைந்து கொள்வதற்கான, குறுங்கால இலக்குகளை சாதித்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும், சில பொழுதுகளில் தோல்விகளும், இழப்புகளும் ஏற்படலாம். இந்த சந்தர்ப்பங்களில் தான் நாம் கவனமாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த சந்தர்ப்பங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எமது வாழ்க்கைப் பாதையினையே மாற்றி அமைத்து விடும். எனவே இந்த சந்தர்ப்பங்களில் நாம் துவண்டு போகாமல், இலட்சியத்தை அடைந்து கொள்ளும் ஆர்வத்தினை கைவிட்டு விடாமல், எதிர்மறையாக சிந்தித்து விடாமல், நாம் தோல்வி அடையக் காரணம் என்ன; அதனை எவ்வாறு நாம் திருத்திக் கொள்வது, அடுத்த குறுங்கால இலக்கினை எப்படி சிறப்புற சாதிப்பது என நேர்மறையாக சிந்திப்பதன் மூலம் எமது ஆர்வத்தினைக் கெடுத்துக் கொள்ளாமல் பாதுகாக்கலாம்.

இந்த கட்டுரை மூலம் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என ஒரு முடிவினை எடுத்திருப்பீர்கள் என நம்புகிறோம். அந்த முடிவினை நாளை நாளை எனப் பிற்போடாமல் இப்போதிருந்தே அமுல் செய்ய முயற்சித்தால் பலன்கள் விரைவில் கிட்டும். அனைவரும் வாழ்வில் முன்னேற இறைவனை பிரார்திப்போம் 

N.A. MOHAMMED
Chemical Engineering(Reading) Institute of Technology, University of Moratuwa

🔵 Follow us on facebook page for more updates 🔵

https://www.facebook.com/scienceorbit.org

Post a Comment

Previous Post Next Post